நீண்ட நாட்களாக விசாரணையில் இருக்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோத்தகிரியைச் சேர்ந்த மூன்று பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருந்தது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தார். தற்பொழுது வரை இந்த வழக்கானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 28 ஆம் தேதி வரை சிபிசிஐடி போலீசார் இதுவரை 48 பேரிடம் விசாரணை நடத்தியதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் தற்பொழுது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனின் நண்பர் கர்சன் செல்வம், கோத்தகிரியில் கடை நடத்தி வரும் மணிகண்டன் உட்பட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் கர்சன் செல்வம் அன்றைய அதிமுக மாவட்ட அம்மா பேரவையின் துணைச் செயலாளர். மூன்று பேரும் வரும் ஏழாம் தேதி காலை 10 மணிக்கு கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு வருமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.