Skip to main content

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
ttk

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்ச் 17 மாலை ராஜாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் " தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையினால், அப்பகுதியில் காற்று, நிலத்தடி நீர் ஆகியவை கடுமையாக மாசடைந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் கடந்த பிப்ரவரி முதலே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள ராஜாஜி பூங்காவில் மார்ச் 9 ஆம் தேதி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்காக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி எங்கள் மனுவை மார்ச் 4 ல் நிராகரித்து விட்டார். இதனால் திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்த இயலவில்லை. ஆகவே, வரும் மார்ச் 17 மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை அதே இடத்தில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆகவே மார்ச் 17 மாலை ராஜாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Vellalar Munnetra Sangha High Level Executive Meeting

தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து உயர்மட்ட நிர்வாகிகள் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஆர்.வி. ஹரிஹரூன் தலைமையில் இன்று (12-03-24) நடைபெற்றது. இதில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை உயர்மட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள். மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சோழிய வேளாளர் நலச் சங்கம் சார்பாக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தேர்தல் கூட்டணி, ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைகள் மேற்கொண்டு இறுதி முடிவை வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் & கழகத்தின் உயர் மட்ட கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது .