Skip to main content

“விமானங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் வழங்க முடியுமா?”- விமானத்துறை பரிசீலிக்க உத்தரவு!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

Can precautionary notices be issued on flights in state languages?

 

விமானங்களில் அவசரக்கால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் வழங்க முடியுமா? என்ற மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவெடுக்க மத்திய விமான போக்குவரத்துத் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், அவசரக் காலங்களில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், விமானத்தில் இருந்து தப்பிக்க அவசர வழி எங்கிருக்கிறது, ஆக்ஸிஜன் குறைபாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் தற்காலிக ஆக்சிஜன் முகக் கவசம் பயன்படுத்தும் முறைகள், சீட் பெல்ட் அணியும் முறைகள், நீர் நிலைகளில் விழுந்தால் தப்பிக்க விமானத்தில் அதற்கான பிரத்யோக ஆடைகள் இருக்கும் இடம் மற்றும் அணியும் முறை குறித்த செயல்முறை விளக்கங்கள் மற்றும் விளக்கக் கையேடு ஆகியவை விமானம் புறப்படுவதற்கு முன்பாக வழங்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அவ்வாறு தற்போது வெளியிடப்படும், கொடுக்கப்படும் அறிவிப்புகள்  ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வழங்கப்படுவதாகவும்,  நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் மட்டுமே ஆங்கிலமும், இந்தியும் தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். அவசர காலத்திற்கான இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்குப் புரிகிற மொழியில் இருக்க வேண்டும் என்பதால், பயணிகள் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு அறிவிப்புகள் மற்றும் விளக்கக் கையேடுகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 8 ல் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, குஜராத்தி, பெங்காலி, காஷ்மீரி, உள்ளிட்ட 23 மொழிகளிலும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். இந்திய நிறுவனங்களால் நடத்தப்படும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ, ஏர் ஏசியா மற்றும் டாட்டா விஷ்ட்டா ஆகிய விமானங்களில் இதை அமல்படுத்துவதுடன், விமானம் புறப்படும் மற்றும் விமானம் சென்றடையும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் அறிவிப்புகள் வெளியிட வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார்.  

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனுதாரர் விமான போக்குவரத்துத் துறையின் செயலாளருக்கு 4 வாரங்களில் புதிதாக மனு அளிக்க உத்தரவிட்டு, மனுதாரரின் யோசனையை பரீசிலித்து 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்