Skip to main content

“பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Beef can be transported in buses Minister Sivasankar

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வசித்து வரும் பாஞ்சாலை என்ற பெண் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சி பக்கோடா விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். அதோடு அரூருக்கும் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். அதன்படி அண்மையில் வழக்கம்போல் தனது சொந்த ஊரிலிருந்து மாட்டிறைச்சியை எடுத்துக்கொண்டு அரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறி சில கிலோமீட்டர் சென்ற பின் நடத்துநர் ரகு, என்ன எடுத்து வர்றீங்க... என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி எடுத்து வருவதாகப் பாஞ்சாலை பதிலளிக்க, இதெல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என்று கூறி மோப்புப்பட்டி என்ற வனப்பகுதியில் பேருந்தை நிறுத்தி பாஞ்சாலத்தை இறக்கி விட்டுள்ளார். பாஞ்சாலை அடுத்த பேருந்து நிறுத்தத்திலாவது இறக்கி விடுங்கள்; இங்கே இறக்கி விடாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத நடத்துநர் ரகு, பாஞ்சாலையை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து பாஞ்சாலை நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்ற அவர், நடந்த சம்பவத்தைத் தனது உறவினர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த பேருந்து திரும்பி அந்த வழியாக வந்த பிறகு வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்டதற்காக ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி பஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Beef can be transported in buses Minister Sivasankar

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளிக்கையில், “அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.  500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்