Skip to main content

தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Ban on sale of cotton candy across Tamil Nadu

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்