Skip to main content

தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Awareness program for students led by the headmaster

 

சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துவருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது. வக்கிர எண்ணம்கொண்ட சில ஆண்களால் பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள், அதனைப் போன்றவர்கள் தவறு செய்ய முனைந்தால் அது சம்பந்தமான புகார்களைத் துணிவுடன் காவல்துறைக்கும், பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும், மாணவிகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்களிடம் நெருங்கிப் பேசும் ஆண்கள் எந்த நோக்கத்திற்காக பேசுகிறார்கள், அவர்கள் தங்கள் மீது கை வைத்துப் பேச முற்படும்போது அதைத் தடுக்க வேண்டும்.

 

துணிவுடன் அவர்களை எதிர்த்து கேட்க வேண்டும். பயந்த மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அப்படிப்பட்ட ஆண்கள் துணிந்து தவறு செய்ய முனைவார்கள். இப்படி கொடூர மனம் படைத்த ஆண்களிடமிருந்து எப்படி பிழைக்க வேண்டும். அவர்களிடம் எப்படி பேச வேண்டும்? எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதற்காக தமிழ்நாடு அரசு பள்ளி கல்லூரிகளில், ஆசிரியர்கள், காவல்துறையினர், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்டோரை அழைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. 

 

அதன்படி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளைத் தனிமனித இடைவெளியுடன் அமரவைத்து அவர்களுக்குத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை விளக்கினர். மேலும், தவறான கண்ணோட்டத்துடன் மற்ற ஆண்கள் அவர்களுடன் நடந்துகொள்ளும்போதும் அவர்களது செயல்முறைகளை எப்படி கண்டறிவது, அதிலிருந்து எப்படி விடுபடுவது என எடுத்துக் கூறினர். இதுபோன்ற செயல்பாடுகளைப் பள்ளி தலைமையாசிரியர்கள், காவல்துறை, பெற்றோர்கள் ஆகியோருக்கு எப்படி தெரிவிப்பது, மாணவிகள் இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறை அளித்துள்ள செல்ஃபோன் எண்ணுக்குத் தகவல் பரிமாற்றம் செய்வது போன்ற பல்வேறு விதமான விழிப்புணர்வு கருத்துகளைக் கூறி மாணவிகளின் மனதில் பதிவுசெய்தனர்.

 

இந்த நிகழ்ச்சியானது பள்ளித் தலைமை ஆசிரியர் ரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திட்டக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்துரு, கேர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஜோசப் ஜான்சன், ஆசிரியர்கள் புவியரசி, செண்பகவல்லி, மணிகண்டன் உட்பட பல்வேறு ஆசிரியர்கள் விழிப்புணர்வு குறித்து மாணவிகளிடம் விவரித்துக் கூறினார்கள். மாணவிகளும் அதிக அளவில் கலந்துகொண்டு மிகவும் ஆர்வமுடன் விழிப்புணர்வுக் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்