Skip to main content

சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்திய பெண்கள்...

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 

ariyalur road improper condition

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவரப்பன்குறிச்சி கிராமத்திலிருந்து அரசன்சேரி செல்லும் 1 கி.மீ தூரம் உள்ள பஞ்சாயத்து சாலையில் மேடும் பள்ளமுமாக இருந்ததால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1 1/2 சரளை ஜல்லி சாலை அமைக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடர் மழை காரணமாகச் சாலை சேதமடைந்திருந்த நிலையில், சாலை சேறும் சகதியுமாக இருந்ததனை அந்த ஊர் மக்கள் பஞ்சாயத்துத் தலைவரான நதியனூரைச் சேர்ந்த சுதா பாலு கவனத்திற்குக் கொண்டு சென்றவுடன், உடனடி நடவடிக்கையாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருந்த மேடு பள்ளங்களில் செம்மண்ணைக் கொட்டினர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் புதிதாகத் தார்ச்சாலை அமைத்துத் தரக்கோரி கிராம மக்கள் சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டது.

 

ஆனால், அதன் பின்னரும் தார்ச்சாலை போடுவதற்கு முறையான நடவடிக்கை இல்லை என்று கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சேறும் சகதியுமாக உள்ள சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அந்த சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் கனமழையால் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் 50 குடியிருப்புகளில், 300க்கும் மேற்பட்ட பெரியவர்களும் குழந்தைகளும் சேற்றுப்புண் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதியுறுவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். மேலவரப்பன்குறிச்சி-அரசன்சேரி கிராமத்திற்குச் செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையைப் பயன்படுத்தி வயல்வெளிக்குச் செல்லும் விவசாயிகளும் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளும்  கடும் அவதிக்குள்ளாகி வருவதாகக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்