Skip to main content

பூ வியாபாரி தற்கொலை! வீடியோவால் சிக்கும் அதிகாரி! 

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Arani land patta issue  Officer caught by video

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ளது நடுக்குப்பம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான பூ வியாபாரி பிரபு. இவருக்கு சரண்யா என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர்.

 

பிரபு குடும்பத்துக்கு சொந்தமான பூர்வீக சொத்து சம்மந்தமாக அண்ணன் தம்பிகள் மூன்று நபர்களுக்கிடையே பிரச்சனை எழுந்து பாகம் பிரித்துக்கொண்டுள்ளனர். தனது பெயரிலான சொத்தை தனியாகப் பிரித்து பட்டா வழங்க நடுக்குப்பம் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்துள்ளார் பிரபு. 

 

பட்டா மாற்றித் தர வி.ஏ.ஓ. சீனிவாசன் என்பவர் ரூ. 10 ஆயிரம் ரொக்க பணம் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இது சம்மந்தமாக கடந்த ஒருமாத காலமாக பட்டா கேட்டு தொடர்ந்து வி.ஏ.ஓ அலுவலகத்திற்குச் சென்று வந்துள்ளார் பிரபு. வி.ஏ.ஓ தொடர்ந்து அலைக்கழித்ததால் மனமுடைந்த பிரபு, அக்டோபர் 20ஆம் தேதி நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் ஆலயத்தில் அருகேயுள்ள குளத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

 

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ பதிவு ஓன்றை பூ வியாபாரி பிரபு வெளியிட்டுள்ளார். அதில், பூர்வீக சொத்து சம்மந்தமாக பட்டா மாற்றம் செய்வதற்கு வி.ஏ.ஓ. சீனிவாசன் என்பவர் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாவதியின் கணவர் துரை என்பவர் உடந்தை என்றும், தான் இறந்த பின்பு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

 

இந்த ஃபேஸ்புக் லைவ் வீடியோ பதிவைப் பார்த்து ஊர் பொதுமக்கள் குளத்தில் சென்று பார்த்தபோது பூ வியாபாரி குளத்தில் மிதந்தபடி சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த களம்பூர் போலீசார் பூ வியாபாரி பிரபுவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

பட்டா மாறுதலுக்கு வி.ஏ.ஓ லஞ்சம் கேட்டதாக கூறி பூ வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்