Skip to main content

ஆளுநர் உரையுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் - தேதியை அறிவித்த சபாநாயகர்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
nn

தமிழக ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்க இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, ''பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை  வருகின்ற பிப்.19 ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய இருக்கிறார். தொடர்ந்து 29 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், வருகின்ற 21ம் தேதி 2023-24 ஆம் ஆண்டுக்கான முன்பண செலவு மானிய கோரிக்கையினையும் தாக்கல் செய்ய உள்ளார்கள்.

ஆளுநர் உரையை தயாரிப்பது அரசின் வேலை. அரசு அந்த பணியை சரியாக செய்யும். போன வருடம் ஆளுநர் உரையின் போது ஏற்பட்ட சர்ச்சை நம்மால் ஏற்பட்டது அல்ல. சட்டமன்ற பேரவை தலைவராலோ அல்லது அரசாலோ எந்த சர்ச்சையும் வரவில்லை. இந்த வருடம் நன்றாக இருக்கும்'' என்றார்.

அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ''சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கே அமர வைக்க வேண்டும் என்பது தொடர்பான முழு உரிமையும் சட்டப்பேரவை தலைவருக்கு தான் உண்டு என நானும் சொல்கிறேன். இதுக்கு முன்னால் இருந்த சபாநாயகர் தனபாலும் அதை சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்'' என்றார்.

கடந்த முறை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தது சலசலப்பை ஏற்படுத்த, பாதி உரையில் இருந்தே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்