Skip to main content

மொட்டைக் கடுதாசியால் சிக்கிய கொலைகாரன்! - மூன்றாண்டு வழக்கின் பின்னணி..

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

சென்னையையே பரபரப்பில் ஆழ்த்தியது அந்தக்கொலை. பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு சென்றது ஒரு கும்பல். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்தவிதத் தகவலும் இல்லாததால் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு, ஒரு மொட்டைக் கடுதாசியால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

 

Murder

 

மே 28, 2015ஆம் ஆண்டு சென்னை போரூரில் உள்ள லஷ்மி நகரைச் சேர்ந்த குளோரி (60) என்ற பெண்ணின் வீட்டிற்குள், வாட்டர் பியூரிஃபையர் விற்பதாகக் கூறிக்கொண்டு நுழைந்தது மூன்று பேர் கொண்ட கும்பல். நுழைந்த வேகத்தில் குளோரியைக் கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் உள்ள பொருட்களைத் திருட ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த குளோரியின் மருமகள் சரளா, குளோரியின் கை, கால்கள் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் ஓடிவந்திருக்கிறார். இதைக் கண்ட அந்த கும்பல் சரளாவைத் தாக்கிவிட்டு, குளோரியின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, 4 சவரன் நகையுடன் அங்கிருந்து தப்பியோடியது.

 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மொட்டைக் கடுதாசி காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தை வாசித்த காவலர்கள் அதே சூட்டோடு அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியசெல்வம் (40) குடிபோதையில் ‘தான் எப்படி குளோரியைக் கொலை செய்தேன்’ என்பதை விளக்கியதாக எழுதியிருந்தார்.

 

இதையடுத்து, ஆரோக்கியசெல்வம் கைது செய்யப்பட்டு, கூடுதல் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார். அவர் டாக்ஸி டிரைவராக இருந்ததும், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சார்ந்த செய்திகள்