சென்னை, அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்த்த 16 வயது மாணவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு, மாநில கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்துள்ளார். இவர், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி நடந்த கலந்தாய்வு தேர்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அதன்பிறகு தனது படுக்கையறைக்கு சென்ற அந்த மாணவன், தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்துவர்கள் உடனடியாக சென்று அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தத் தகவல் அம்பத்தூர் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்துவந்த காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கினர். மேலும், மாணவன் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்தனர். அதில் அந்த மாணவன் படித்து வந்த அதே பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பாடம் நடத்தும் பெண் ஆசிரியையுடன் அதிக நேரம் பேசி வந்ததும், நெருங்கி பழகி வந்ததும் தெரியவந்தது. மேலும், இருவரும் தனிமையில் எடுத்துகொண்ட புகைப்படங்களும், செல்ஃபிகளும் செல்போனில் இருந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், ஆசிரியை மாலையில் தனியாக டியூஷன் நடத்தி வந்துள்ளார். அந்த டியூஷனில் இந்த மாணவனும் சேர்ந்து படித்துவந்துள்ளார். அப்போது அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு, பிறகு அது காதலாக மாறியுள்ளது. ஆசிரியை, மாணவனுடன் பலமுறை தனிமையில் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பள்ளி ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த ஆசிரியை தனக்கு மாணவனுடன் பழக்கம் இருந்ததை ஒப்புக்கொண்டார். மேலும், விசாரணையில் ஆசிரியைக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானதும், அதனால் அவர் மாணவனுடன் பேசுவதை நிறுத்தியதும், அதில் மன உளைச்சலில் இருந்த மாணவன் இந்த தற்கொலை முடிவை எடுத்ததும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.