Skip to main content

‘கோயில்களை சீரமைக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு’ - அறநிலையத்துறை

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
'Allocation of Rs 5 crore for renovation of temples' - Department of Charities

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த இக்கட்டான நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் துறை ரீதியிலான ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (26.12.2023) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 26 கோயில்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட கோயில்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 5 கோடி ரூபாயை இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்