Skip to main content

ஜெயக்குமார் கைதைக் கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல்!  (படங்கள்)

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் வாக்களிக்கச் சென்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் தாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

அதன் தொடர்ச்சியாக, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்கு நேரில் அழைத்து சென்று ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு எதிரே ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தலைமையிலான அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அ.தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடாததால், அ.தி.மு.க.வினர் அனைவரையும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று, அப்புறப்படுத்தினர். 

 

மேலும், நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் நெருங்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வினரின் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தைச் சுற்றி உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.      

 

இதனிடையே, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு வெளியே இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனை நேரில் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆறுதல் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்