Skip to main content

'அந்த நீதிபதி மீதும் நடவடிக்கை பாய வேண்டும்' - வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 'Action should be taken against that judge too' - Vanathi Srinivasan interviewed

திமுக அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் நேற்று சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் டிசம்பர் 21ல் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். அதனைத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை இழந்துள்ளார் பொன்முடி.

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

 'Action should be taken against that judge too' - Vanathi Srinivasan interviewed

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'பொன்முடி வழக்கில் தீர்ப்பு நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை யாரும் வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என மனு போடவில்லை. ஒரு நீதிமன்ற உத்தரவின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆர்டர் வாயிலாக அப்பொழுது உயர்நீதிமன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் அந்த வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றினர். அந்த விசாரணை கூட மாவட்ட நீதிபதி ஓய்வு பெறக்கூடிய ஒரு மாத காலத்திற்குள் விசாரித்து முடித்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இது எதை காட்டுகிறது என்றால் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் அல்லது எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு தண்டனை பெறுவது ஒரு புறம், இன்னொரு புறம் இவர்களுக்கு உதவுகின்ற நீதித்துறையில் இருக்கின்ற நபர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்