வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் மீது 2015 ஆம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த வழக்கில் இன்று ஆ.ராசா ஆஜரானர்.
வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் சொத்து குவித்ததாகக் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய முன்னாள் அமைச்சராக இருந்த ஆ. ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இது தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கு எம்.பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மொத்தம் (நான்கு தனிநபர்கள், இரண்டு நிறுவனங்கள் உட்பட) ஆறு பேரும் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த ஆறு பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய் சடரங்கனி உள்ளிட்ட 4 பேரும், அதேபோல் கோவை ஷெல்டர்ஸ், மங்கல் டெக் பார்க் என்ற 2 நிறுவனமும் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பி வழக்கு விசாரணையை ஜனவரி 10ஆம் தேதி தள்ளி வைத்தது நீதிமன்றம்.
இந்நிலையில் இன்று ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். நேரில் ஆஜரான ராசாவிடம் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் என்னென்ன குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது என்பது குறித்து தெரிந்துகொண்டு பின்னர் பேசுவதாக ஆ.ராசா தெரிவித்துள்ளார். மீண்டும் இந்த வழக்கு வரும் பிப்.8 ஆம் தேதி விசாரணைக்கு வரும் பொழுது மீண்டும் ஆ.ராசா ஆஜராவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.