தேவாரத்தில் காட்டுயானையை பிடிக்க கொண்டுவரப்பட்ட இரண்டு கும்கி யானைகள், மீண்டும் பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டன. தேனி மாவட்டம், தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில், கடந்த 3 மாதத்திற்கு முன் ஒற்றை பெண் யானை புகுந்து பயிர்களை துவம்சம் செய்தது. கூலித்தொழிலாளி ஒருவரையும் அடித்துக் கொன்றது.
இதையடுத்து காட்டுயானையை பிடிப்பதற்காக, கடந்த ஒரு மாதத்திற்கு முன் பொள்ளாச்சியில் இருந்து மாரியப்பன், கலீம் என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்ன. இவை தேவாரம் அரண்மனை தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே 10 நாட்களுக்கு முன்பு திடீரென இரண்டு காட்டு யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. ஒரு யானையை பிடிக்க மட்டுமே இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் காட்டுயானைகளை பிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.
இதனிடையே, கும்கி யானைகளின் மனநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்ததில், கும்கி யானைகளுக்கு இனப்பெருக்க காலம் என அழைக்கப்படும் “மஸ்து காலம்” தற்போது தொடங்கியுள்ளது. இதனால் இரண்டு கும்கி யானைகளும் உடனடியாக பொள்ளாச்சியில் உள்ள டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு திருப்பி கொண்டு செல்லப்பட்டன.
பகலில் இவற்றை கொண்டு சென்றால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் நேற்று இரவோடு இரவாக ஒவ்வொன்றாக லாரிகளில் ஏற்றி கொண்டு சென்றனர். காட்டுயானையை பிடிக்காமல் கும்கி யானைகள் திரும்ப சென்றதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Published on 07/09/2018 | Edited on 07/09/2018