Skip to main content

விபத்துக்குள்ளான 108 ஆம்புலன்ஸ்! நோயாளி உட்பட இருவர் பலி! 

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

108 ambulances accident! Two passes away including patient!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடராஜ், பழனிச்சாமி ஆகிய இரண்டு பேர் சிகிச்சை பெற்றுவந்தனர். அவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், அவர்கள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். 

 

மேல் சிகிச்சைக்காக சென்ற இருவருடனும் அவர்களது உறவினர்கள் 5 பேர் பயணித்தனர். 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சங்கர் என்பவர் ஓட்டினார். மருத்துவ உதவியாளரான சத்யா வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்து பயணித்த நிலையில், மொத்தமாக அந்த வாகனத்தில் ஒன்பது பேர் பயணித்தனர். 

 

திண்டுக்கல் - கரூர் சாலையில் சத்திரப்பட்டி அருகே அந்த ஆம்புலன்ஸ் வந்தபோது, அதே சாலையில் பயணிகளை இறக்குவதற்காக நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தின் பின் பக்கத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாக மோதியது. இதில் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் இருந்த பழனிச்சாமியும் மற்றும் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் பயணித்த ஐந்து பேரும் காயமடைந்தனர். மேலும், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சத்யாவின் கால்கள் உடைந்து முற்றிலும் சேதமடைந்தன. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சங்கர் லேசான காயங்களுடன் தப்பினார். 

 

விபத்து குறித்து அறிந்த வேடசந்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் படுகாயமடைந்த ஒருவர் மட்டும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். விபத்து நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளுடன் வேடசந்தூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்