Skip to main content

"100% அ.தி.மு.க. இணையும் என்ற நம்பிக்கை உள்ளது"- சசிகலா பேட்டி! 

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

"100% hope to join AIADMK" - Sasikala interview!

 

சென்னை தியாகராயர் நகரில் இன்று (25/05/2022) காலை செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்காததால் நான் வர வேண்டும் எனக் கூறுகின்றனர். அ.இ.அ.தி.மு.க.விற்கு மீண்டும் வருவேன், என்ட்ரி கொடுப்பது தொண்டர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தான். அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அ.இ.அ.தி.மு.க.வாக செயல்படுவோம் என்று எனக்கு 100% நம்பிக்கை உள்ளது. 

 

தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி விரைவில் வரும் என்று நம்புகிறேன். நிர்வாகம் சரியாக இல்லாததாலேயே தமிழகத்தில் கொலை, குற்றங்கள் அதிகரித்துள்ளன. காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது. மேட்டூர் அணையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறாமல் எப்படி தண்ணீர் திறக்க முடியும்; தூர்வாரவில்லை என்பதே உண்மை. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காக செயல்பட்டனர். 

 

ஓராண்டில் 505 திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக அரசுதான் சொல்கிறதே தவிர, மக்களுக்கு திட்டங்கள் சேரவில்லை. மத்திய அரசை தி.மு.க. அரசு குறை கூறிக் கொண்டே இருப்பதைத் தவிர்த்து மக்களுக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஜெயலலிதா தொடங்கிய திட்டங்களை ஒவ்வொன்றாக மூடி வருகிறார்கள். ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டங்களை நிறுத்தாமல் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்."இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார். 

 

இதனிடையே, பேரறிவாளன் விடுதலையை எப்படி பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள சசிகலா, "பேரறிவாளனுக்கும், நடந்த நிகழ்விற்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்கிறார்கள். இதை விசாரணை அதிகாரியே சொல்லி ஒத்துக்கொண்டிருக்கிறார்; நான் தவறுதலாக செய்துவிட்டேன் என்று. அதனால் அவரை விடுதலை செய்ததில் தவறுதலாகத் தெரியவில்லை. விடுதலைக்கு முதல்முதலாக விதைப் போட்டது ஜெயலலிதா" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்