கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப் பாஜகவுடனான கூட்டணிதான் காரணமென முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜகவின் பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் தங்களுடைய தோல்விக்கு அதிமுகதான் காரணம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக '''உங்களால்தான்' என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு..." என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் நேற்று (07.07.2021) ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ''தேச நலன், தமிழ்நாட்டின் நலன் கருதி அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. பாஜக மீதும், மோடி மீதும் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டிருந்தனர்.அவர்களுடன் அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தியும் நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கட்சி தலைமையின் கூட்டணி கணக்கு சரியில்லை என்று கூறிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தாமதமாக சொல்லியிருந்தாலும் உண்மைதானே. சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் இழந்துவிட்டோம் என்கிறார். அதுவும் பாட்டாளி மக்கள் கட்சியை விட்டுவிட்டார். கூட்டணியில் தலைமை செய்த முடிவு தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைச் சொன்னார் அல்லவா சி.வி சண்முகம்! என்னைப் போல, அவரை கட்சியைவிட்டு நீக்க நடவடிக்கை எடுக்க முடியுமா. எடுங்க பார்ப்போம்'' என தெரிவித்துள்ளார்.