Skip to main content

பொய் பேசும் அரசியல்வாதிக்கான நோபல் பரிசு! எடப்பாடி பழனிசாமிக்கா? மு.க.ஸ்டாலினுக்கா?

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டிக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பிரச்சாரம் செய்தபோது “எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய பொய்” என்று குறிப்பிட்டு மக்களிடம் அளித்த விளக்கம் இது.   

 

palanisami

 

“அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதை கண்காணிப்பதற்காக ஒரு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, அதன் பொறுப்பு அலுவலராக (Nodal Officer) தமிழக அரசால் மருத்துவர் பாலாஜி நியமிக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலில் ஏ.கே.போஸ் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஏ,பி படிவங்களில் மருத்துவர் பாலாஜி முன்னிலையில், ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன், நீதிமன்றத்தில் ஏ,பி படிவங்களில் ஜெயலலிதா கைரேகை பெறப்பட்டது குறித்து வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பில் ‘ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ நிர்வாகத்தின் மூலமாகவோ, அல்லது சிகிச்சை அளித்த மருத்துவர் மூலமாகவோ அதைப்  பெற்றிருக்கவேண்டும்’ என்ற கருத்தைத்தான் நீதிமன்ற தீர்ப்பில் நீதிபதி தெரிவித்திருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அதை இட்டுக்கட்டி, பொய் பரப்பி, கண், காது, மூக்கெல்லாம் வைத்து எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசி, மக்களிடம் குழப்பத்தை விளைவிப்பதற்காக, அயோக்கியத்தனமான ஒரு வார்த்தையை பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தீர்ப்பில் இப்படி சொல்லியிருக்கிறார்கள். அதை எப்படி திரித்துப் பேசுகிறார்? ஒரு அரசியல்வாதிக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்று சொன்னால், அதை மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்றார்.  

 

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் திரித்து மு.க.ஸ்டாலின் பொய் பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மைதானா? என்ற கேள்விக்கு விடை தேடினோம்.

 

jayalalitha

 

டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கில் நீதியரசர் வேல்முருகன் வழங்கிய தீர்ப்பில் “ஆளுநரோ, மத்திய அமைச்சர்களோ, மாநில அமைச்சர்களோ பார்க்கமுடியாத ஜெயலலிதாவை அரசு மருத்துவர் பாலாஜி சென்று பார்த்து கைரேகை வாங்கினார் என்பது நிரூபிக்கப்படவில்லை. டாக்டர் பாலாஜி உள்ளே போகும்போது, ஏ மற்றும் பி படிவங்களில் ஏற்கனவே கைரேகை வைக்கப்பட்டிருந்ததாகவும், மற்ற படிவங்கள் என்ன ஆனது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறுகிறார். ஆகவே, ஜெயலலிதா சுய நினைவோடு, யோசிக்கும் திறனோடு, நல்ல மனநிலையில்தான் இருந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஏனென்றால், அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு டிரக்யாஸ்டமி எனப்படும் தொண்டைக்குழாய் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது தெளிவாகிறது. எனவே, ஏ மற்றும் பி படிவங்களில் ஜெயலலிதாவுடைய கைரேகை மிகவும் சந்தேகத்துக்குள்ளானதாக இருப்பதால், அந்தப் படிவத்தை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். வேட்புமனுவில் கையெழுத்துதான் பெறப்பட வேண்டும் என்று சட்டம் கூறும்போது, அதில் கைரேகை இடலாமென்று தேர்தல் ஆணையம் சட்டத்தைத் திருத்தி கடிதம் மூலமாக ஒப்புதல் அளித்தது சட்ட விரோதமானது. எனவே, மிகுந்த குறைபாடுடைய இந்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அதனால், ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது” என்று தீர்ப்பளித்துள்ளார். 
 

மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி  தெரிவித்த கருத்தையும், ஜெயலலிதா கைரேகை வழக்கில் சென்னை  உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், இக்கட்டுரை வாயிலாக அறிந்ததும் ‘பொய் பேசுவதற்கான நோபல் பரிசு பெறுவதற்குத் தகுதியானவர் எடப்பாடி பழனிசாமியா? மு.க.ஸ்டாலினா?’ என்பது தானாகத் தெரிந்துவிடும். 
 

-ராம்கி

 

 

 

சார்ந்த செய்திகள்