Skip to main content

“எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகத்தான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது” - வைகோ குற்றச்சாட்டு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Vaiko has alleged that Arvind Kejriwal was arrested to intimidate the opposition parties

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இந்தியா கூட்டணி சார்பில் நடக்கும் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். 20 நாட்கள் பிரச்சாரம் செய்யும் அவர் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில்  பெரம்பலூர், திருச்சி  திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.

பின்னர் திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது, “வரும் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இன்று கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதிலே இந்தியா கூட்டணி வலுவாகவே இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தை துவங்குகிறார். தமிழகம் - புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துதான் டெல்லி முதலமைச்சரை கைது செய்து கொண்டு போனார்கள்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள். இந்துத்துவ அஜண்டாவை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கூட மறுத்து வருகிறார்கள். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள். ஆகவே ஜனநாயகத்திற்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் சம தர்ம கொள்கைக்கும் விரோதமாக ஒரு கூட்டம் இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது. இது பெரியார் பூமி, அறிஞர் கலைஞருடைய பூமி. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு உண்மையாக விடுக்கப்பட்ட சவால். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகத்தான் கெஜ்ரிவால் கைது. இதனை பாரதிய ஜனதா ஒத்துக் கொள்ள மறுக்கிறது. அவர்கள் எதைத்தான் ஒத்துக் கொள்வார்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து, நேற்று திருச்சிக்கு வந்த துரை. வைகோ திருவரங்கத்தில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

சார்ந்த செய்திகள்