Skip to main content

ஓட்டுக்கு கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கிய ஆளும்கட்சியினர்! -உசிலம்பட்டி பெண் வாக்காளர் ஆவேசம்!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

தமிழகத்தில் 38 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விட்டது. எல்லா தொகுதிகளிலும் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தனர்.
 

theni


குறிப்பாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி நாடாளுமன்ற தொகுதியில் பணம் ஆறாகப் பாய்ந்தது.  அங்கு இடைத்தேர்தல் நடந்த பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம்,  சோழவந்தான், உசிலம்பட்டி, கம்பம், போடி தொகுதி மக்களுக்கு ஓட்டுக்கு ரூ.1000 வீதம் கனகச்சிதமாக பட்டுவாடா செய்தது அதிமுக தரப்பு.

அதுதான் தேர்தல் முடிந்துவிட்டதே! இனி எதற்காக பட்டுவாடா குறித்துப் பேச வேண்டும்? பெண் ஒருவரைப் பேச வைத்துவிட்டார்கள் ஆளும் கட்சியினர். 

உசிலம்பட்டியில் ஓட்டுக்காகப் பணம் வாங்கிய பாக்கியம் என்பவர்,  தேர்தல் நாளன்று ஓட்டுப் போட வரவில்லை என்று கூறி, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கின்றனர் அதிமுகவினர். அதனால் ஆத்திரமடைந்த பாக்கியம், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்.  

ஆனாலும், "நாங்களும் ரெட்ட இலைக்காரங்கதான். நாங்கள் கேட்காமலே பணத்தைக் கொடுத்துட்டு இப்படி அசிங்கப்படுத்தலாமா? எங்க வீட்ல ஏதாச்சும் பிரச்சனை வந்தால்.. அதிமுக கட்சிக்காரங்க பதில் சொல்லியாகணும்." என்று மீடியாக்களிடம் குமுறித் தீர்த்துவிட்டார். அவருடைய ஆவேசப் பேச்சு,  சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. 

‘கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தே தீரும்’ எனச் சொல்வதுபோல, பணப்பட்டுவாடா விவகாரத்தை ஆளும் கட்சியினரே அம்பலப்படுத்திவிட்டனர். 
 

 

சார்ந்த செய்திகள்