ஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்த தங்க தமிழ்செல்வனுக்கு கொம்பு சீவி, புதிய ஜல்லிக்கட்டை ஏற்படுத்தி, எடப்பாடியின் அரசியலை வளர்க்க வேண்டும் என்று அமித்ஷா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது என்று நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் கட்டுரை வெளியாகி உள்ளது.
அதில், பல மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று பல இடங்களைப் பெற்றவர்கள் கூட அமைச்சர் பதவி வேண்டும் என்று மல்லுகட்டி நிற்கவில்லை.
அனால் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக முஸ்தீபுகளை செய்த பன்னீர் செல்வத்தை அமித்ஷா - மோடி அணியினர் ஒடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு இல்லை. அவரது தொகுதியில் உள்ள மக்கள்கூட பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசி வருகிறார்கள்.
சொந்த மாவட்டத்தில் குடும்ப அரசியல் செய்து மற்றவர்களை ஒடுக்கி, கூட்டணியை அழித்து வருகிறார் என்று அமித்ஷாவுக்கு மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்துதான் பன்னீர்செல்வத்தை அமுக்க வேண்டும், அவருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் ஒடுக்க வேண்டும் என்று முடிவு செய்த அமித்ஷா, தற்போது தனது வேலையைக் காட்ட தொடங்கிவிட்டார்.
பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதால் பன்னீர்செல்வதுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நெருக்கடியைவிட சொந்த மாவட்டத்தில் தங்க தமிழ்செல்வனால் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி மிகவும் பெரிது என்று பன்னீர் செல்வம் தன் உதவியாளர்களிடம் புலம்பி வருவது தெரிந்ததே.
இதனைத் தொடர்ந்து தன் மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று மல்லுகட்டிய பன்னீரை வீழ்த்த அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தங்க தமிழ்செல்வனை அமமுகவில் இருந்து இழுத்து, கொம்பு சீவி, புதிய ஜல்லிக்கட்டை ஏற்படுத்தி, எடப்பாடியின் அரசியலை வளர்க்க வேண்டும் என்று அமித்ஷா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக எடப்பாடியும் தங்க தமிழ்செல்வனைப் பயன்படுத்தி பன்னீர்செல்வத்துக்கு அவர் சொந்த மாவட்டத்திலேயே ஆப்பு வைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த வியூகங்களின் செயல்பாடுதான் தங்க தமிழ்செல்வனின் திடீர் ஆவேசம் மற்றும் தரக்குறைவான பேச்சு ஆகும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.