கடந்த 2012ம் ஆண்டு இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் என்ற குறும்படத்தை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. இந்த ஆர்ப்பாட்டம் அரசின் அனுமதி இல்லாமல் நடைபெற்றது என பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி இன்று இந்த வழக்கில் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை வரும் 11.11.2019க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிமுன் அன்சாரி, ''நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து படம் வெளியிட்டிருந்தார்கள். அதனை கண்டித்து தமிழ்நாட்டில் பரவலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதில் சில இடங்களில் மக்கள் ஆவேசமடைந்து உருவபொம்மைகளை எரித்தார்கள். அப்போது நாங்கள் மக்களை அமைதிப்படுத்தினோம். இதுபோன்ற நேரத்தில் மக்களை அமைதிப்படுத்துவதுதான் தலைவர்களின் பணி. நாங்கள் யாரும் உருவபொம்மையை எரிக்கவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் மக்களை அமைதிப்படுத்தும் பணியைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்கள். அதனை நாங்கள் சட்டப்படி எதிர்க்கொள்வோம்'' என்றார்.