Skip to main content

உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி மீதான தாக்குதல் - பாமக ராமதாஸ் கருத்து 

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

'Supreme Court verdict is an attack on social justice' - comments by Pamaka Ramadoss

 

மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-ஆவது திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இட ஒதுக்கீட்டின் நோக்கம் சமூக நிலை முன்னேற்றம் தான் என்ற சமூகநீதியின் அடிப்படை தத்துவத்தை இந்தத் தீர்ப்பு தாக்கி, தகர்த்து எறிந்திருக்கிறது என பாமக நிறுவனர்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரத்தில் நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் பல மாநிலங்களிலும் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. பொருளாதார அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்தச் சட்டத்திருத்தம் செல்லாது என அறிவிக்கக்கோரித் தொடரப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5  நீதிபதிகள் கொண்ட அமர்வு, உயர் வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என 3:2 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்துள்ளது.

 

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு இரு வகைகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் இரு முக்கிய அம்சங்களுக்கு எதிராக அமைந்துள்ளது. அவற்றில் முதலாவது கல்வி, சமூகநிலை ஆகியவற்றில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; இரண்டாவது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்பதாகும். அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வியிலும், சமூகநிலையிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவர்களில் பட்டியலினத்தவரும், பழங்குடியினரும் கல்வி - சமூகநிலையில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மற்றவர்களை அடையாளம் காண்பதற்காகவே பின்னாளில் காகா கலேல்கர் ஆணையமும், மண்டல் ஆணையமும் அமைக்கப்பட்டன.

 

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண மண்டல் ஆணையம் ஆய்வு செய்த 11 காரணிகளில் ஒன்று கூட தனித்த பொருளாதாரம் சார்ந்தவை அல்ல. கடன், குடிசை வீடுகள், குடிநீர் வசதி இல்லாமை போன்ற சமூக பின்தங்கிய நிலைக்குக் காரணமான அம்சங்கள் தான் கருத்தில் கொள்ளப்பட்டன.   சமூக ஏற்றத்தாழ்வுகளின் கொடிய அடக்குமுறைகளை இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர் என்பதால் தான் ஓபிசி இட ஒதுக்கீடு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி வழங்கப்பட்டது.

 

ஆனால், இப்போது சமூகநிலையில் எந்தப் பின்னடைவையும் எதிர்கொள்ளாமல், அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும், அதுவும் கூட ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என்று கூறி 10% இட ஒதுக்கீடு வழங்குவதும், அதை எந்தக் கேள்வியும் எழுப்பாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூகநீதியின் மீதான தாக்குதல் ஆகும்.

 

இட ஒதுக்கீடு என்றாலே புள்ளிவிவரங்கள் எங்கே? என்று கேட்கும் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் அத்தகைய வினாவை எழுப்பாதது மிகவும் வியப்பளிக்கிறது. உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு, 2010-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சின்ஹோ ஆணையத்தின் அறிக்கைதான் அடிப்படையாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆணையத்தின் அறிக்கையில், உயர் வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று எந்தப் பரிந்துரையும் அளிக்கப்படவில்லை; மாறாக, அவர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கலாம் என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, உயர் வகுப்பு  ஏழைகளின் மக்கள்தொகையை அறிய எந்தக் கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இதை 11.12.2019 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சமூகநீதி அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது.

 

இவ்வாறு எந்தக் கணக்கெடுப்பும் நடத்தப்படாமல் உயர் வகுப்பு ஏழைகளுக்கு எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை. அது குறித்து உச்சநீதிமன்றமும் எந்த வினாவும் எழுப்பாததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது, அதை உறுதி செய்ய போதிய அளவில் புள்ளி விவரங்கள் இருந்தும் கூட, கூடுதல் புள்ளி விவரங்களைத் திரட்ட வேண்டும் என்று கூறி அந்த  இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. ஆனால், எந்த புள்ளி விவரமுமே இல்லாமல் உயர் வகுப்பு ஏழைகள் இட ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சமூகநீதி இரு அளவுகோல்களால் அளவிடப்படக்கூடாது.

 

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், உயர் வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகளும், செல்லாது என்று 2 நீதிபதிகளும்  தீர்ப்பளித்திருந்தாலும் கூட, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 5 நீதிபதிகளும் கூறியிருக்கின்றனர். இது இந்தியாவின் சமூகநீதி தத்துவத்தை வறுமை ஒழிப்புக் கொள்கையாகக் குறுக்கிவிடும்; மேலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்க வகை செய்யும்.

 

இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மிகக் கூடாது என்று 1962-ஆம் ஆண்டில் பாலாஜி வழக்கிலும், 1992-ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், உயர் வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை அனுமதிப்பதற்காக இட ஒதுக்கீட்டுக்கான  50% உச்சவரம்பு வளைக்க முடியாதது அல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இதுவும் சமூக அநீதியானது.

 

ஒருபுறம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும் பகுதியினருக்கு கிரீமிலேயர் தத்துவத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவு அவர்களின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அவர்களின் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு  வளைக்கத்தக்கது தான் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்ட நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய அவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்தி நிர்ணயிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்