Skip to main content

தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டி! 

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

  Padmarajan to contest in local elections too!

 

தேர்தல் மன்னன் பத்மராஜனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 1988ஆம் ஆண்டு முதல் எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிடுவது இவரது வழக்கம். 

 

  Padmarajan to contest in local elections too!

 

காலஞ்சென்ற பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்நாள் பிரதமர் மோடி, இப்படி பிரதமர் வேட்பாளர்களைக் கூட எதிர்த்து வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு, புதுவை மாநில ராஜ்ய சபா தேர்தலில் கூட வேட்புமனு தாக்கல் செய்தவர். இதுவரை இவர், 221 முறை பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டுள்ளார். இவர் கின்னஸ் மற்றும் லிம்கா புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார். 

 

  Padmarajan to contest in local elections too!

 

இந்த நிலையில், தற்போது 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணிகள் கடந்த 4 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து நேற்று (20.09.2021) காலை சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் வந்து இறங்கினார். ஏற்கனவே தயார் செய்யப்பட்டு எடுத்து வந்திருந்த ஆவணங்களுடன் சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட வி.அலம்பலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும், அம்மையகரம் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கும், அதேபோல சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட 11வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கும், 11வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் என மொத்தம் நான்கு பதவிகளுக்குப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து, அரசியல் கட்சி வேட்பாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 

 

  Padmarajan to contest in local elections too!

 

இதுகுறித்து அவர் பேசும்போது, “வேட்பாளராக போட்டியிடும்போது பஞ்சர் கடை வைத்து நடத்தும் பத்மராஜனும் பாரதப் பிரதமரும் ஒன்றுதான் என்பதை நிரூபித்துள்ளேன். இதுவரை, தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நான்கு பதவிகளுக்கும் சேர்த்து 225வது முறையாக தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். ஜனநாயக நாடு, அதில் போட்டிப் போடும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் யாரை வேண்டுமானாலும் எதிர்த்துப் போட்டியிட முடியும். போட்டியிட வேண்டும் என்பதை நிலை நாட்டவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடர்ந்து தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டுவருகிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்