Skip to main content

“கட்சியைத் தூக்க முடியாதவர்கள் பல்லக்கு தூக்க வந்தார்கள்..” - பாஜகவை சாடிய நாஞ்சில் சம்பத்! 

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

Nanjil Sampath comment BJP

 

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் 99வது பிறந்த நாளை திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் தொகுதி வாரியாக பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காட்டூர் பகுதி திமுக சார்பில் நடந்த கலைஞரின் 99வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளரும் 42 வது வார்டு கவுன்சிலருமான நீலமேகம் தலைமை வகித்தார். அதில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர்களும் கலந்துகொண்ட்னர். 

 

இந்தக் கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், "டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்குச் சில ஆட்டுக்குட்டிகள் மிரட்டி கத்துகின்றன. வரலாற்று சிறப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சரைத் தரக்குறைவாக விமர்சிப்பதற்கெல்லாம் அஞ்சமாட்டோம். பயந்து அஞ்சி நடுங்கும் கட்சியல்ல திமுக. ஜனநாயக உச்சியின் சிகரமாய்த் திகழ்கிறார் முதல்வர் ஸ்டாலின். திருவாரூரில் ஓடாத ஆழித்தேரை ஓட வைத்தவர் கலைஞர். இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய அவரது பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்பா? இதற்கெல்லாம் அஞ்சி பதுங்கும் கழகமல்ல திமுக. எந்தவொரு மிரட்டலையும் சவாலையும் திமுக சந்திக்கும். எதற்கும் எப்போதும் சமரசமாகாத கலைஞர் வழியிலேயே ஸ்டாலினும் நடைபோடுகிறார். இனியும் நடைபோடுவார். ஆனால், அவர் சமரசமாகிடுவார் என அவதூறு பரப்பி வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியில் தமிழகம் இன்று பூந்தோட்டமாய்த் திகழ்கிறது. 


கல்லறை சென்ற தலைவர்களை இன்றைக்கு சனாதன கும்பல் கொச்சைப்படுத்தி வருவது என்ன நாகரிகம் என தெரியவில்லை. நபிகளை அவமதித்ததால் அந்நிய நாடுகளில் கண்டன போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். நம்மை மிரட்டிப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமல் ஆட்சி செய்யும் ஸ்டாலினுக்கு உறுதுணையாய் திமுகவினரின் உழைப்பும், தீவிர கண்காணிப்பும் இனிதான் தேவை. பல்வேறு பிரச்சனைகள் சூழ்ந்த பள்ளிக் கல்வித்துறையைச் சிரமம் பாராது சிரித்தமுகத்துடனேயே செயல்படுத்துவது ஆச்சரியமே. ஆனால் அவரையும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.


கட்சியைத் தூக்க முடியாதவர்கள் பல்லக்கு தூக்க வந்தார்கள். இனி சும்மா இருக்க மாட்டோம். இனி திமுக சார்பில் பாசறை கூட்டங்கள் நடக்கும். கடந்த 77 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் தண்ணீர் திறந்தது ஸ்டாலினின் சிறந்த ஆட்சியில்தான். ஸ்டாலின் ஆட்சியைக் குறைகூற முடியாமல் பிரச்சனைகளைத் தேடி அலைகிறார்கள். ஒன்னேகால் வருடங்கள் போராடிய விவசாயிகளுக்கு எதிராக சட்டம் நிறைவேற்ற அதிமுக துணைபோனது. இந்திய அரசியலிலிருந்து இவர்கள்  வெளியேற்றப்பட வேண்டியவர்கள்" என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்