Skip to main content

கரோனா வைரஸ் பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா? மன்னிப்பு கேட்க வேண்டும்... ஜவாஹிருல்லா ஆவேசம்!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020


டெல்லியில் உள்ள மேற்கு நிஜாமுதினில் இஸ்லாமிய சமூகத்தினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற "தாப்லிக் இ ஜமாத்" மாநாடு சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற டெல்லி மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதிக்கு மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பலருக்குக் கிருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதோடு, 'தப்லிக்' நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை  கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டில் வைத்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி 10 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை கரோனா வைரஸ் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கும் இரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  பரிசோதனை முடிவு வந்துள்ள நிலையில் அவர்களுக்குக் கரோனா தொற்று இல்லை என்று கூறப்படுகிறது.இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

 

politics



இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. மேலும் "தாப்லிக் இ ஜமாத்" மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் தான் கரோனா பரவி வருகிறது என்று சில அரசியல் கட்சியினர் கூறிவருவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. 

இதனால், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதில் கரோனாவை எதிர்த்து மக்கள் ஒன்றாகச் சேர்ந்து போராடி வரும் நிலையில், சிறுபான்மை சமூகத்தைக் குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா ஆவேசமடைந்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். 

அதில், குறிப்பிட்ட மதக் குழுவினர் நடத்திய நிகழ்ச்சிக்குச் சென்று வந்தவர்கள், தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உட்பட முஸ்லிம் சமூகச் சான்றோர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி அதன் காரணமாக 99 விழுக்காட்டினர் மருத்துவப் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

இந்த உண்மைகளையெல்லாம் நன்கு தெரிந்த தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட மதக்குழுவினர் மீது மட்டும் மக்களுக்குப் பீதியை ஏற்படுத்தும் வகையிலும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும் வெறுப்பு அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகள் போல் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கதக்கது என்று கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்