Skip to main content

'மேடைகளில் மட்டும் சமூகநீதி பேசி நடிக்கிறார் மு.க.ஸ்டாலின்'- பாமக ராமதாஸ் தாக்கு

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
'M.K.Stalin talks about social justice only on stage'- Pmk Ramadoss Thakku

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், நேற்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ சமூக நீதிக்கு சவக்குழியை தோண்டும் கட்சி தான் பா.ஜ.க.. சமூக நீதி, சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய கட்சிதான் பா.ஜ.க. சமூக நீதியை பாதுகாக்க வேண்டும், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும், பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டின் தேசியக் கொடி கம்பீரமாக செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால் பா.ஜ.க. வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

சமூக நீதி பேசும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. மக்களுக்கும் பா.ம.க.வினருக்கும் அதற்கான காரணம் நன்றாகவே தெரியும். பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்ததை அக்கட்சியினராலேயே ஜீரணிக்க முடியவில்லை. வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக தி.மு.க. போராடியது. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு” எனப் பேசியிருந்தார்.

'M.K.Stalin talks about social justice only on stage'- Pmk Ramadoss Thakku

இந்நிலையில் முதல்வரின் பேச்சுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடி அவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார். மண்டல் ஆணையத்தின் அறிக்கையை பத்தாண்டுகள் கிடப்பிலும், அதற்கு முந்தைய காகா கலேல்கர் ஆணைய அறிக்கையை குப்பைத் தொட்டியிலும் போட்டு வைத்திருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசிடமிருந்தே, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்த இந்த இராமதாசுவால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் வலிமையாக இருக்கும் போது, சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க முடியும். தமிழ்நாட்டில் சமூகநீதிச் செடிக்கு வெந்நீர் ஊற்றி அழித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்த கவலை கிஞ்சிற்றும் தேவையில்லை.

2004ஆம் ஆண்டில் சமூகநீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த அளவு உறுதியுடன்  இருந்ததோ, அதே உறுதியுடன் தான் இப்போதும் உள்ளது. நாடாளுமன்றத்தில் அப்போதிருந்த அளவுக்கு  வலிமையை இப்போதும் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கொள்கை வலிமையையும்,  அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறை கொண்டவர் போல நடிக்கிறார். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.

ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக திமுகவுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். அதை திமுக விரைவில் உணரும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்