Skip to main content

"ஆளுநராக இருந்தாலும்... ஆண்டவராக இருந்தாலும்... தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்" - அமைச்சர் துரைமுருகன்

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

minister durai murugan talks about tamil nadu akshya pathiram scheme and governor fund issue 
கோப்பு படம்

 

தமிழ்நாடு சட்டப் பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று (20.04.2023) சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வேல்முருகன் பேசுகையில், "சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதால் அவருக்காக வழங்கும் தொகையை நிறுத்தி வைக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

 

இதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசுகையில், "கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆளுநரின் செயலாளர் நிதி கேட்டு அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் எவ்வித காரணமும் இல்லாமல் 5 கோடி ரூபாய் செலவுக்கு வழங்கும்படி குறிப்பிட்டு இருந்தனர். எப்படி அவ்வாறு வழங்க முடியும். ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாத செலவுக்கு 2 கோடி ரூபாய் கேட்டிருக்கின்றனர். அமைச்சர் கையெழுத்து இல்லாமல் அன்றைய நிதித்துறை செயலாளரே தன்னிச்சையாக முடிவெடுத்து அந்த தொகையை வழங்கியுள்ளார். மேலும் 1 லட்சத்து 56 ஆயிரம் தொகை 50 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டு 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த தொகை அட்சயபாத்திர திட்டத்திற்கு என்று கூறி ஆளுநரின் வீட்டு கணக்குக்கு நிதி சென்றிருக்கிறது.

 

2021 ஆம் ஆண்டு புதிய ஆளுநர் வந்த பிறகு 17 கோப்புகளின் அடிப்படையில் நம்முடைய அரசு நிதி வழங்கியுள்ளது. சுதந்திர தின விழாவுக்கு 25 லட்ச ரூபாயும், சுற்றுப் பயணத்துக்கு 15 லட்ச ரூபாயும், அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 10 லட்ச ரூபாயும், கிறிஸ்துமஸ் விழாவுக்கு 25 லட்ச ரூபாயும், குடியரசு தின விழாவுக்கு 20 லட்ச ரூபாய் என நிதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்த மாநிலத்திலும் உள்ள ஆளுநர்களுக்கு இவ்வளவு நிதியும் கூடுதல் சலுகையும் வழங்கப்படவில்லை. எந்த துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஓராண்டுக்குள் செலவு செய்யாவிட்டால் அடுத்த ஆண்டு அந்த தொகையை கேட்கக்கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஆளுநர் 3 கோடி ரூபாய் தான் செலவு செய்துள்ளார். எனவே, இனி 5 கோடி ரூபாய் வழங்கப்படாது" எனத் தெரிவித்தார்.

 

அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "அட்சய பாத்திரம் காலை உணவு திட்டத்தை அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் என்றுதான் அன்றைக்கு நான் கூறினேன்" எனத் தெரிவித்தார். இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், "அட்சய பாத்திரம் திட்டத்தை நிதியமைச்சர் குறை சொல்லவில்லை. ஆளுநராக இருந்தாலும் ஆண்டவராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அல்லது தவறு நடக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்" என்றார்.

 

அதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "அதிமுக ஆட்சியின் போது சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான அட்சய பாத்திரம் என்ற காலை உணவுத் திட்டமானது தமிழக அரசின் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டதா அல்லது ஆளுநரின் சொந்த முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டதா" எனக் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இதுகுறித்து விளக்கமளிக்கையில், "அட்சய பாத்திரம் என்ற அமைப்பினர் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு  இடம் மற்றும் ஒருங்கிணைந்த சமையல் கூடம் போன்ற உதவிகளை செய்து தருமாறு தமிழக அரசிடம் கேட்டனர். நல்ல திட்டம் என்பதால் திட்டத்திற்கான இடங்களை வழங்கினோம். ஆனால் ஆளுநரிடம் நிதியை கொடுத்து அட்சய பாத்திரம் திட்டத்தை தொடங்குமாறு அப்போதைய அரசு தரப்பில் கூறவில்லை" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்