Skip to main content

ம.தி.மு.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
MDMK Matters relating to symbols; High Court action order to the Election Commission

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று (25.03.2024) அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று (26.03.2024) இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, “தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்” என வாதிட்டார்.

MDMK Matters relating to symbols; High Court action order to the Election Commission

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், “சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். ம.தி.மு.க. கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பிறகு ம.தி.மு.க.விற்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்” என வாதிட்டார். இதனையடுத்து பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து பிற்பகல் 02.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 2.15 மணிக்கு ஒத்திவைத்திருந்தனர்.

MDMK Matters relating to symbols; High Court action order to the Election Commission

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், “பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை என்பதால் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து நாளை (27.03.2024) காலை 09.30 மணிக்குள் மணிக்குள் தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார்” என தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும். நாளை பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் குறித்து தெரிவிக்க வேண்டும்” என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்