Skip to main content

சின்னம் தொடர்பான விவகாரம்; ம.தி.மு.க. முக்கிய கோரிக்கை!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Matters relating to symbols; MDMK Important request

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (27.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடுகையில், “பொதுச்சின்னங்கள் பட்டியலில் இல்லாத பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை. ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் வைகோ தரப்பில் வாதிடுகையில், “வேறு மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது. கடந்த 2010ஆம் ஆண்டு ம.தி.மு.க. அங்கீகாரத்தை இழந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தின் படி ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை வழங்க முடியாது. எனவே ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது’ எனத் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 

இந்நிலையில் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்க திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ம.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்காமல் மாநில கட்சியாக உள்ள ம.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ம.தி.மு.க. மாநிலக் கட்சியாக இருப்பதால் கேட்கும் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ம.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது. மார்ச் 30 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளது. அப்போது ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்படும் சின்னம் குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வாக்கு எண்ணிக்கை; சத்யபிரதா சாகு முக்கிய ஆலோசனை! 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Counting of votes Satyapratha Sagu Important Advice

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில்  வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது சிசிடிவி கேமரா வசதிகள், 3 அடுக்கு பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார்.