Skip to main content

அறப்போராட்டத்தில் இப்படி ஒரு அதீதமான கொடுமை! - பாஜக அரசுக்கு கி.வீரமணி கண்டனம்! 

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

K. Veeramani condemns the BJP government in P Chidambaram issue

 

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை வாங்கியதில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்றும் இன்றும் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சில இடங்களில் காவல்துறையினருக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு நடந்தது. இதில், முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரத்திற்கு லேசான கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், தி.க தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சியின்  ‘திரிசூலங்களில்’ ஒன்றான அமலாக்கத் துறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை விசாரணைக்கு அழைத்து நேற்று (13.6.2022) 11 மணிநேரமும், இன்றும் நடத்துவதை எதிர்த்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் எதிர்ப்புக் குரல், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி ஜனநாயக வழியில் அவர்களது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.

 

டில்லித் தலைநகரில் நடந்த அறப்போராட்டத்தில், தேவையற்ற தள்ளுமுள்ளு நெருக்கடியில் முன்னணி தலைவர்களில் ஒருவரான மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் நண்பர் ப.சிதம்பரம் அவர்களுக்குக் கால் முறிவு ஏற்படுத்தும் அளவுக்கு, காவல்துறை நடந்துகொண்டது வன்மம் நிறைந்த அடாவடி செயல் ஆகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 


ஜனநாயக நாட்டில் அமைதி வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமை கூடக் கிடையாது என்பது எவ்வகையில் நியாயம் என்பதை ஒன்றிய உள்துறையின் அங்கமாக உள்ள டில்லி காவல்துறையினரிடம் கேட்டு, நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் விரைவில் குணமடைய விழைகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்