Skip to main content

ஏமாற்றப்படுவது அப்பாவி விவசாய பெருமக்கள் தான் என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது: விஜயகாந்த்

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
dmdmk

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர்  விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்களில் நடைபெறுகின்ற முறைகேடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

’’தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு செழித்தோங்கிய விவசாயம் இன்று பெரும் பின்னடைவில் உள்ளது. நெல்லுக்குரிய ஆதாரவிலை சரியாக கிடைக்கப்பெறாமல் விவசாயிகள் சொல்லெணாத் துயரினை அடைந்துவருகின்றனர். மேலும் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்க்கடன் சரிவர வழங்காத நிலையிலும், வெளியில் கடன் பெற்று, உழுது பயிர் செய்த நெல்தானியங்களை அரசு கிடங்கில் விவசாயிகளிடம் சரிவர கொள்முதல் செய்யாததால், உழுதவனுக்கு உரிய பலன் கிடைக்காமல் உயிர்விட்ட விவசாயிகள் பலபேர் என்பதை நினைக்கையில் நெஞ்சம் பதறுகிறது.


    
தமிழக அரசு கடந்த ஆண்டு அரசு பட்ஜெட்டில் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்படும் என்பதை இலக்காக வைத்தது. ஆனால் வயலும், வாழ்வும் என்ற நிலை மறந்து, விவசாயம் எனும் உயிரை மரணத்தின் வாசலுக்கு தள்ளியிருக்கிறது இந்த தமிழக அரசு. இந்த நிதியாண்டுக்கான 2018-2019 பட்ஜெட்டில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்காக திருந்திய நெல்சாகுபடி முறை 10 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படும் என்றும், சாதாரண ரக நெல், குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 1,600 விலையிலும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 1,660 விலையிலும், அரசு கொள்முதல் செய்யும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசத்தை, நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக வழங்க 2018-2019 ஆண்டிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இது வெறும் கண்துடைப்பு நாடகமே என்றும், விவசாயிகளை ஏமாற்றும் விதமாகவும் அமைந்துள்ளது.

 

நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதை பயிர் செய்வதற்காக கடுமையான சோதனைகளையும் தாண்டி, பயிரிட்டு, அதை கொள்முதல் செய்ய அரசின் நெல் கொள்முதல் கிடங்கிற்கு எடுத்து சென்றால், அங்குள்ள அதிகாரிகள் அதை கொள்முதல் செய்வதை தட்டிக்கழிக்கும் விதமாக பல துன்பங்களை விவசாயிகளுக்கு தருகின்றனர். குறிப்பாக நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதற்காக ஈரப்பதம் உள்ளது என்றும், பதர் நிறைந்துள்ளது என்றும் காரணம் காட்டி காக்கவைப்பது, நெல்மூட்டைகளின் தரங்களை குறைத்து சொல்வது, பின் அந்த நெல்மூட்டைகளை எடை போடுவதற்கு ரூபாய் 40 முதல் 50 வரை கையூட்டு கேட்பது போன்ற பல துன்பத்திற்கு விவசாயிகளை ஆளாக்குகின்றனர். இதனால் விவசாயிகள் விரக்தியடைந்து அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு எடுத்துசென்று விவசாயிகள் வியாபாரிகளிடம் அரசு நிர்ணயித்த விலையை விட, குறைந்த விலைக்கு சான்றாக (ஒரு குவிண்டாலுக்கு) தமிழக அரசு ரூபாய் 1,600 என்று நிர்ணயித்தால், அவர்களுக்குள்ளாக உடன்படிக்கை செய்து ரூபாய் 1,300 என அவசரகதியில் நெல்லை கொள்முதல் செய்கின்றனர். பின்பு அதை மீண்டும் அரசு கொள்முதல் கிடங்களில் ஒரு மூட்டைக்கு ரூபாய் 200 முதல் 300 வரை வித்தியாசத்தில் கையூட்டு கொடுத்து அரசு கிடங்குகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

 

இதனால் ஏமாற்றப்படுவது அப்பாவி விவசாய பெருமக்கள் தான் என்பதை அறியும்போது மிகவும் வேதனையாக உள்ளது. சிலநாட்களுக்கு முன்புகூட இத்தகைய கடுமையான துன்பத்தினால் நாகை மாவட்டம், வேதாரண்யத்திற்கு அடுத்த கரியாப்பட்டினம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்கின்ற விவசாயி உயிரிழந்துள்ளார். பெரும்பாலும் டெல்டா பகுதி விவசாயிகள் பெரும்துன்பத்திற்கு ஆளாகி கடுமையான நெருக்கடியினால் அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டின் விலையின்படி, தங்களுக்கு நெல் கொள்முதல் விலை கிடைக்கப்பெறவில்லை என்பதையும் அரசின் திட்டங்கள், வெறும் ஏட்டளவில் உள்ள வாய் வார்த்தைகளாகவே உள்ளன என்றும், இதனால் லாபம் அடைவது இடைத்தரகர்களான வியாபாரிகள் தான் என்பதையும், தெள்ளத்தெளிவாக விவசாயிகள் தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் எடுத்துரைத்து மனம் குமுறுவதை பார்க்கும் பொழுது, விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால் தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும் என்கின்ற கூற்றை நினைவில் கொண்டு இந்த ஆட்சியாளர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே  சொந்தம்” - சீமான் பேச்சுக்கு விஜயகாந்த் மகன் பதிலடி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Vijayakanth son of Seaman said that Murasu symbol belongs only to dmdk

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வருகை தந்தார். அப்போது வத்தலகுண்டு காளியம்மன் கோவில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னூத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்த விஜய பிரபாகரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய விஜய பிரபாகரன் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசும்போது, “திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே. பத்தாண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது. அண்ணன் சீமான் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்றது போல் தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு, தேமுதிக தொண்டர்களையும் பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது.

மேலும் ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, ஜாதியை பார்த்து வாக்களிப்பது என்பது இருந்துவிடக் கூடாது. தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார். இந்த விழாவில் நகரம், ஒன்றியம், மாவட்ட பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.