Skip to main content

" முதல்வர் சொன்னதால அடக்கி வாசிக்கிறோம்... எகிறி அடிச்சா நல்லா இருக்காது" - அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை! 

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

 '' He should not take our ambushes as fear '' - Minister Sekarbabu warns Madurai Aadeenam!

 

அண்மையில் மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மதுரை ஆதீனம், ''திராவிடம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கின்றனர். இன்றைய தினம் சர்ச் சொத்தில் அரசு தலையிடுவதில்லை, மசூதியின் சொத்தில் அரசு தலையிடுவதில்லை. ஆனால் நம்முடைய திருக்கோவில் சொத்துக்கள் அவர்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறி வருகிறது. அறநிலையத்துறை எனும் அறமில்லாத துறையை கலைத்துவிட வேண்டும்.

 

கலைத்துவிட்டு ஒரு நீதிபதியை போட்டு அவர்களுக்கு கீழ் வழக்கறிஞர்களைப் போட்டு அதற்கு கீழ் ஊர் பெரிய மனிதர்களைப் போட்டு எங்களையும் கலந்துகொண்டு எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும். அப்படி ஒரு நிலைமை வரவேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் உண்டியலில் காசு போடக்கூடாது. கோயில் நிலத்தில் வாடகைக்கு இருந்துகொண்டு வாடகை கொடுக்காமல் யார் டிமிக்கி கொடுத்தாலும் சரி அடுத்த பிறவியில் அவர்களெல்லாம் வௌவாலாக பிறப்பார்கள். சாபம் விடுகிறேன் என்றால் வேறென்ன செய்வது. பாரதி சொன்னார் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன்வந்து பாயுது காதினிலே'. இப்பொழுது பாரதி இருந்திருந்தால் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே' என்று சொல்லியிருப்பார்.

 

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று சொன்னது திருமூல திருமந்திரம். எல்லாம் அண்ணா சொன்னது என்கிறார்கள். பரவாயில்லை திருடி எடுத்துப் போட்டாலும் சந்தோசம். இப்படியெல்லாம் ஆன்மீகத்திலிருந்து திருடிக் கொள்கிறார்கள். திருடிக்கொண்டு திராவிடம் திராவிடம் என பேசிக்கொள்கிறார்கள்'' என விமர்சித்தார்.

 

 '' He should not take our ambushes as fear '' - Minister Sekarbabu warns Madurai Aadeenam!

 

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் மதுரை ஆதீனத்தின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் மிகவும் அடக்கி வாசித்துக்கொண்டிருக்கிறோம். நாங்களும் திரும்ப அடிக்க முடியும். ஆனால் அது நன்றாக இருக்காது என்பதற்காகத்தான் பின்னால் வருகிறோம். கலைஞர் ஒரு தத்துவத்தை சொல்லியிருக்கிறார். அதிக தூரத்திலிருந்து ஓடுவது எதற்காக என்றால் குறிப்பிட்ட உயரத்தைத் தாண்டுவதற்கு என்று, எனவே எங்களின் பதுங்கல்களை அவர் பயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எங்களுக்கும் பாயத்தெரியும். மதுரை ஆதீனம் தொடர்ந்து அரசியல்வாதிபோல் பேசிக்கொண்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது.

 

அதேபோல் ஆதீனங்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலையில் இருக்கவேண்டும், அவர்களது உரிமையில் தலையிடக்கூடாது என்று எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதனால்தான் கடந்த 4 ஆம் தேதி கூட தருமபுரம் ஆதினம் தான் கட்டியுள்ள 24 அறைகளை இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் என்ற முறையில் எங்களை அழைத்துத் திறந்து வைத்தார். அதோடு அவர் நடத்திவரும் பாடசாலை, கோசாலை  எல்லாம் ஆய்வு செய்துவிட்டு அவரோடு காலை சிற்றுண்டியை பகிர்ந்துகொண்டவிட்டு வந்துள்ளோம். ஆனால் ஆதீனங்கள் அரசுக்கு ஆதரவாக இல்லை என்பதைப்போன்ற தோற்றத்தை உருவாக்க மதுரை ஆதினம் நினைக்கிறார். இதுபோன்ற விமர்சனங்களை நிறுத்திக்கொள்வது நல்லது என அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்