Skip to main content

“ஆட்சி அமைக்க இன்று மாலைக்குள் அழைப்பு..” - ஆர்.எஸ்.பாரதி

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

"Call to form the government by this evening .." - RS Bharathi

 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சியாக அதிமுக சட்டமன்றத்தில் நுழைகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சியினர் நம்பியிருந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. 

 

அதனைத் தொடர்ந்து நேற்று (04.05.2021) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சட்டப்பேரவை குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தார். அதை அனைத்து உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

அதனைத் தொடர்து இன்று காலை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். இந்தச் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி “இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இன்று மாலைக்குள் பதவி ஏற்கும் அறிவிப்பை அனுப்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்” என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.   

 

மு.க. ஸ்டாலினின் ஆளுநர் சந்திப்பின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்