Skip to main content

“உண்மையிலேயே பாராட்டத்தக்கது” - திமுக அமைச்சரை புகழ்ந்த அதிமுக மாஜி!

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

Former AIADMK minister praises DMK minister as "really commendable"!

 

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி. ராஜா அமைச்சராகப் பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியானது. தொடர்ந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி டி.ஆர்.பி. ராஜாவிற்கான பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று காலை 10.30 மணியளவில் நடந்தது.

 

இதன் பின்னர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் வகித்து வந்த தொழில் நுட்பத்துறையை நிதித்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனித வளத்துறை தங்கம் தென்னரசுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட நாசர் வகித்து வந்த பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Former AIADMK minister praises DMK minister as "really commendable"!

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரையில் அமைச்சர் தென்னரசு மிகச் சிறந்த நிர்வாகி; மிகச்சிறந்த ஆற்றலாளர்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் எங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் சொல்லவில்லை. உண்மையிலேயே அவர் சிறந்த நிர்வாகி. எந்த துறையைக் கொடுத்தாலும் அதில் அவருடைய முத்திரையை பதிக்கக்கூடியவர். அது எனக்கு தெரியும். 

 

மாற்றுக் கட்சியில் இருந்தாலும் அவர் முத்திரை பதிக்கக்கூடியவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்று இருக்கும் அமைச்சர்களில் யாரையும் குற்றம் சொல்லி குறை சொல்லி தரக்குறைவாக பேசாமல் தனது கருத்துக்களை வலுவாக பேசக்கூடியவர். ஆளும் கட்சியின் ஆதாரங்களை அல்லது அவர்களுடைய அதிகாரங்களை எடுத்துச் சொல்லக்கூடியவர். யார் மனதையும் புண்படுத்தாத அளவிற்கு செயல்படக்கூடியவர். அவரிடத்தில் நிதித்துறை சென்றிருப்பது உண்மையில் பாராட்டக்கூடியது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்