Skip to main content

இரண்டு தேர்தல் அறிக்கை வெளியிடும் திமுக: முன்பே சொன்ன நக்கீரன்

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
 

அப்போது, திமுக தேர்தல் அறிக்கை நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து இருக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒட்டுமொத்தமாக அறிக்கை தரப்படும். அதேபோல், 18 தொகுதிகளுக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரப்போகின்றது. அதற்கும் தனியாக அறிக்கை தயாரிக்கப்பட்டு அதுவும் முறையாக வழங்கப்படும்'' என்றார் ஸ்டாலின். 

 

dmk



''இரண்டு தேர்தல் அறிக்கை வெளியிட திமுக திட்டம்!'' என்ற தலைப்பில் 11.03.2019 திங்கள்கிழமை நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

 

அதில், ''நாடாளுமன்ற தேர்தலும், தமிழக சட்டமன்றத்திற்குட்பட்ட 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கின்றன. இதனை மையப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு ஒரு தேர்தல் அறிக்கையும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' என்கிற தலைப்பில் இடைதேர்தலுக்காக ஒரு தேர்தல் அறிக்கையும் என 2 தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைமைக்கு சமீபத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2 அறிக்கைகளை திமுக வெளியிட வாய்ப்பு அதிகம்'' என குறிப்பிட்டிருந்தோம்.
 

இடைத்தேர்தலுக்காக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் பேருந்து கட்டணத்தை குறைத்தல், மின் கட்டண கணக்கெடுப்பினை (ரீடிங்) மாதந்தோறும் எடுத்தல், குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 6 மாதத்திற்கு தினமும் 1 லிட்டர் பால் இலவசம் உள்ளிட்ட பல அறிவிப்புகளை செய்யவிருக்கிறது திமுக என தகவல்கள் கிடைக்கின்றன. 
 

இத்தகைய தேர்தல் அறிவிப்புகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்புடன் அறிக்கை தயாரிப்பில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் கவனம் செலுத்தியிருப்பதாக தெரிகிறது.

 

சார்ந்த செய்திகள்