Skip to main content

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.