Skip to main content

“தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட அண்ணாமலை” - வைகோ காட்டம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

“Annamalai who behaved like a fool” - Vaiko

 

சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவைப் பெற சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சாரக் கூட்டம் பாஜக கட்சி சார்பில் நேற்று நடத்தப்பட்டது. கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைக் கண்டு பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பாடலை உடனடியாக நிறுத்தச் சொன்னார். தொடர்ந்து கன்னட வாழ்த்துப் பாடலை பாடுமாறு கூறினார். 

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ்த்தாயை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கர்நாடகாவில் நடந்த இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “கர்நாடக மாநிலம், சிவமோகாவில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில், தமிழர்களே பெரும்பாலானவர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டார். கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, கர்நாடக மாநில பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா திடீரென்று குறுக்கிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். அத்தோடு கன்னட மொழி பாடலையும் இசைக்கச் செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எவருக்கும் கன்னட மொழி தெரியவில்லை என்பதை அவர்களே வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்கள்.

 

இப்படிப்பட்டச் சூழலில் அங்குள்ள தமிழ் மக்களிடம் தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பாவும், அவரது பா.ஜ.க.வும் இழிவு செய்துள்ள போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியது. இதனைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைவர்கள் உள்ளம் குமுறி அறிக்கை வெளியிட்டதை அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக பொறுப்பில்லாமல் உளறிக் கொட்டி அறிக்கை என்ற பெயரில் தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி என்பது மட்டுமல்ல, உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி என்னும் வரலாறு அண்ணாமலைக்கும், ஈஸ்வரப்பாவுக்கும் அறவே தெரியாது என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது. 

 

தமிழ்மொழியை இழிவு செய்யும் வகையிலும், தமிழர் - கன்னடர் பகையை வளர்க்கும் வகையிலும் தேச ஒற்றுமையை சிதைக்கும் வகையிலும் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட ஈஸ்வரப்பாவும், அண்ணாமலையும் பா.ஜ.க. நிர்வாகிகளும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்