Skip to main content

“மத்திய அரசின் ஆய்வு அறிக்கையை நான் ஏற்கவில்லை” - அண்ணாமலை

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
Annamalai says I don't accept the central government's inspection report

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யத் தமிழகம் வந்த மத்தியக் குழுவினர், தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளைக் கையாண்ட விதத்தைப் பாராட்டினர். மேலும், புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு ஆய்வுக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய அரசு ஆய்வு அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், இந்த அரசு வெள்ளத்தை கையாண்ட விதம் மோசம் எனத் தமிழக முதல்வர் ஒப்புக்கொள்ள வேண்டும். அதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும். 

மத்திய அரசு 75 சதவீதம் நிதி கொடுக்கிறது. மாநில அரசு மீதம் 25 சதவீதத்தை கொடுத்து நிவாரண நிதியை வழங்க வேண்டும். மத்திய அரசு அதிகாரிகள் அரசியல் பேசமாட்டார்கள். அதனால்தான், தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டியிருக்கிறார்கள். நானே, ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தால் இந்த அரசை குறை சொல்லமாட்டேன். மத்திய அரசு அதிகாரிகள் குழு, மாநில அரசு அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியதாக கூறியதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதிகாரிகள் சக அதிகாரிகளை விட்டுக் கொடுப்பதில்லை. தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பாராட்டு மட்டும் தேவை. ஆபத்து நேரத்தில் பா.ஜ.க அரசியல் செய்யாது.” என்றார். 

சார்ந்த செய்திகள்