Skip to main content

அமைச்சரின் மகன், மருமகனுக்கு கரோனா!!! –கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 16/07/2020 | Edited on 16/07/2020
Vaniyambadi

 

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நிலோபர் கபில். அமைச்சர்கள், வாரம் ஒருமுறை கரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனர். ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அறிகுறி ஏதாவது இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என முதல்வர் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் எம்.எல்.ஏக்கள், மா.செக்கள் யாரும் பொதுமக்களுடன் சென்று பழக வேண்டாம் என வாய்மொழி உத்தரவும் இடப்பட்டுள்ளதாம்.

 

இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்துக்காக கடந்த ஜூலை 14ந் தேதி சென்னை சென்றார் அமைச்சர் நிலோபர் கபில். அவருடன் வாணியம்பாடியில் இருந்து அவரது மகன், மருமகன் மற்றும் குடும்பத்தார் சென்னை போய் வந்தனர். சென்னையில் இருந்த வந்த அவர்களுக்கு வாணியம்பாடி நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூலமாக பி.சி.ஆர். டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.

 

பரிசோதனை முடிவுகள் ஜீலை 16ந் தேதி காலை வந்துள்ளது. அதில் அமைச்சரின் மருமகன் மற்றும் மகன் என இருவருக்கும் கரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் உடனடியாக சென்னைக்கு சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கரோனா வந்தவர்களை வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது, நாங்களே வந்து கரோனா மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம் எனச்சொல்லி அதனை கடுமையாக பின்பற்றும் சுகாதாரத்துறை, நகராட்சி மற்றும் காவல்துறையினர், அமைச்சரின் மகன் மற்றும் மருமகன் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் என தெரிந்த பின்பு, அவர்களை தனிமைப்படுத்தாமல் வாணியம்பாடியில் இருந்து சென்னை செல்ல அவர்களுக்கு அனுமதி தந்தது எப்படி, இங்கிருந்து எப்படி சென்றார்கள் என்கிற கேள்வி சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்