Skip to main content

பாமக தொகுதிகளை தேமுதிக வேட்டையாடிவிடும்... - பொங்கலூர் மணிகண்டன் அதிரடி

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

ddd

 

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தாங்கள் விரும்பிய தொகுதி எண்ணிக்கை மற்றும் தொகுதிகளைத் தர மறுப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன்.

 

அவர், ''அதிமுகவிற்கு கடும் சவாலான இந்தத் தேர்தலில், இப்போது தேமுதிக விலகியதால், அதிமுக கூட்டணி வெற்றிக்காக கடுமையாகப் போராடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதுவும் கூட்டணிக் கட்சிகளான பாமக, பாஜக நிலைமை படுமோசமாகிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாம். 

 

தேமுதிகவிற்கு வாக்குவங்கி சரிந்துவிட்டது என்று மதிப்பீடுகள் செய்து அலட்சியப்படுத்தியதால், அதிரடியாக வெளியேறி அதிமுக கூட்டணியை ஆட்டம் காண வைத்துவிட்டது தேமுதிக. தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட பிறகே வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கு அதலபாதாளத்தில் சரிந்தது. 
 

ddd

 

பாமகவின் பலம் என்று பார்த்தால், திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் வரை, வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை, அதேபோல விழுப்புரத்திலிருந்து கடலூர் வரை என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தேமுதிகவின் பலம் கடலூரில் இருக்கிறது. இதே கடலூரில் பாமகவின் செல்வாக்கு இருந்தாலும்கூட, தேமுதிகவுக்கு அதைவிட அங்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதை பாமகவினராலேயே மறுக்க முடியாது.

 

கடந்த தேர்தல்களில் பாமகவுக்கு செல்வாக்குள்ள விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் விஜயகாந்த். பாமக வாக்கு வங்கிகள் இருப்பதாக சொல்லப்படும் 45 தொகுதிகளில் தேமுதிக வலிமையாகவே உள்ளது. இதன்படி கும்மிடிப்பூண்டி, திருத்தணி, அம்பத்தூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், பாலக்கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, செங்கம், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், ஆரணி, செய்யாறு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், திண்டிவனம், கெங்கவல்லி, ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், சேலம் மேற்கு, அரியலூர், விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மயிலாடுதுறை உட்பட 45 தொகுதிகளில் 2005இல் எப்படி இருந்ததோ, இன்னும் அதே வலிமையுடன் உள்ளது தேமுதிக.

 

ஆக, சிறுபான்மையினர் வாக்குகள் பாஜகவை பழிவாங்கும் என்றால், பாமக நிற்கும் தொகுதிகளில் தேமுதிக வேட்டையாடிவிடும் என சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்'' எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்