Skip to main content

“இந்திய அளவில் பேச வைக்கக்கூடிய மாபெரும் வெற்றியைத் தர வேண்டும்” - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
 ADMK symbol is left to wither says Minister I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி சார்பாகப் போட்டியிடும் சி.பி.எம். கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து ஆத்தூர் தொகுதி  சார்பாக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் பஞ்சம்பட்டி பிரிவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி  தலைமை தாங்கினார்.  ஆத்தூர் கிழக்கு ஒன்றியச்  செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி. செந்தில்குமார், திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மற்றும் கூட்டணிக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ஆத்தூர் தொகுதியில் உள்ள ஆத்தூர் ரெட்டியார்சத்திரம் ஆகிய இரண்டு யூனியன்களில் இருந்து  பொறுப்பாளர்களும் பொதுமக்களும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

 ADMK symbol is left to wither says Minister I. Periyasamy

இக்கூட்டத்தில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை அறிமுகம் செய்துவிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது திமுக சார்பாக போட்டியிட்ட வேலுச்சாமி அதிக வாக்குகள் பெற்று இந்திய அளவில் 3ம் இடம் பெற்றார். அதைவிட ஒருபடி மேலே போய் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிடும் நமது கூட்டணி வேட்பாளர் சச்சிதானந்தம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற ஒவ்வொரு திமுக தொண்டனும் கடுமையாக உழைக்க வேண்டும்.

கட்சியினருக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒரே இயக்கத்தின் கீழ் இருக்கிறோம் என்பதை உணர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். நம் கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு செய்யும் தேர்தல் களப்பணியை பார்த்து நமது வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் தேர்தல் பணியாற்றும் அளவிற்கு நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற தலைவராக தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளை மாபெரும் வெற்றி பெற வைக்கக்கூடிய தலைவராக உள்ள நமது முதல்வர் ஸ்டாலின், திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருமை சகோதரர் சச்சிதானந்தம் அவர்களை நம்மிடம் ஒப்படைத்துள்ளார்.

 ADMK symbol is left to wither says Minister I. Periyasamy

கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் அவரை இந்திய அளவில் பேச வைக்கக்கூடிய அளவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தர வேண்டும். நமது கழகத்தில் சாதாரண அடிமட்ட தொண்டனை, கட்சி நிர்வாகியை உயர் பதவி பெருமளவிற்கு கைப்பிடித்து உயர்த்தி உள்ளேன். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு நமது மாவட்டத்தில் ஒவ்வொரு திமுக தொண்டனையும் உயர்த்தி உள்ளேன். கலைஞர் வளர்த்த இந்த இயக்கத்தில் பலர் கட்சி பொறுப்புக்கு வரலாம் அமைச்சர் பதவிக்கு வரலாம். அவர்களிடம் இல்லாத வரலாறு ஒன்று உள்ளது. அது என்னுடைய சரிதை எழுதினால் தெரியும். சுய சரிதை எழுதும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லாவிட்டாலும் எனக்கு பின்னால் வரக்கூடிய கட்சி நிர்வாகிகள் தெரிந்து கொண்டால் ஒரு மாவட்டத்தில் அடிமட்ட தொண்டன் முதற்கொண்டு மேல்மட்ட நிர்வாகிகள் வரை எப்படி நடத்த வேண்டும். எப்படி கட்சி வளர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வார்கள்.

இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதியும் மாபெரும் வெற்றியை இந்தியா கூட்டணி பெறும் அதற்கு நமது திராவிட ஆட்சி நாயகன் செயல்பாடுகள் உறுதுணையாக இருக்கும். இதுவரை நாம் தேர்தல் களத்தில் செய்யாத பணியை இப்போது நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து கூட்டணி கட்சியான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்துக்கு ஓட்டு சேகரிக்கும் போது குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறையும் பொதுமக்களை சந்திக்கும் போது, முதல்வர் ஸ்டாலின்  ஆட்சியில் மக்களுக்கான ஆட்சியின் செயல்பாடுகள் நலத்திட்டங்களை தினந்தோறும் பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்ய வேண்டும்.

நாம் கடந்த முறை முத்தமிழறிஞர் ஆட்சியில் இருந்தபோது 24 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கினோமோ, அதைவிட மாபெரும் சாதனையாக மகளிர் உரிமை தொகையை ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு நமது முதல்வர் வழங்கி உள்ளார்கள். வருகின்ற 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் உங்கள் அக்கவுண்டில் 15 ஆம் தேதியே பணம் வந்துவிடும். இதுதான் திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க. ஸ்டாலின் ஆட்சியின் சாதனை. இந்தியாவில் இந்தியா கூட்டணி 360க்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி மகத்தான சாதனை படைக்கும். நம் தேர்தல் பணியில் போட்டி வேட்பாளரே இல்லை என்ற எண்ணத்தில் தேர்தல் பணியாற்றக் கூடாது.

 ADMK symbol is left to wither says Minister I. Periyasamy

நீங்கள் ஒவ்வொருவரும் போட்டியிடுவது போல் நினைத்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும். 2009 தேர்தலில் என்.எஸ்.சி. சித்தன் போட்டியிட்ட போது, காங்கிரஸ் திண்டுக்கல் தொகுதியில் வீக்காக இருக்கிறது என்று அரசியல் பிரமுகர்கள் பேசினார்கள். ஆனால் அவர்கள் பேச்சு மொத்தத்தையும் தவிடுபொடி ஆக்கும் வண்ணம் ஒட்டுமொத்த வாக்காளர்களும் சித்தன் அவர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்தார்கள்.

ஆத்தூர் தொகுதியில் 50 குடும்பங்கள் இருந்தால் கூட அப்பகுதியில் பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. குடகனாறு, மருதாநதி, மாங்கரை, ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டிக் கொடுத்தது முத்தமிழறிஞர் கலைஞர் அரசும், திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான். ஆத்தூர் தொகுதி மட்டுமில்லை திண்டுக்கல்லுக்கும் சேர்த்து 550 கோடியில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும். இதன் மூலம் திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் குடி தண்ணீர் பிரச்சனை நிரந்தரமாகத் தீர்க்கப்படும்” என்றார்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபானி, ஆத்தூர் நடராஜன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, பொருளாளர் கு. சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ. நாகராஜன், மார்க்கிரேட் மேரி, பிலால் உசேன், மதிமுக மாவட்டச் செயலாளர் என். செல்வராகவன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி செயலாளர் பி.எஸ். ஜெயராமன், தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் தமிழரசன், சிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.பி. மணிகண்டன் எனக் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். நிறைவாக ரெட்டியார்சத்திரம் சி.பி.எம். கட்சி ஒன்றிய செயலாளர் கே.எஸ். சக்திவேல் நன்றி கூறினார்.

சார்ந்த செய்திகள்