Skip to main content

தமிழிசைக்கு பதிலாக கனிமொழிக்கு வாக்குக் கேட்ட அதிமுக வேட்பாளர்! - விளாத்திக்குளம் காமெடி

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

‘சீட்’ கிடைச்ச உடனே மனுசனுக்கு தலை கால் புரியவில்லை என்றார் அந்த விளாத்திகுளம் அதிமுக நிர்வாகி. என்ன விஷயம் என்று கேட்டோம். அவரே விளக்கமாக சொன்னார்.

"மந்திரி தயவால் ‘சீட்’ வாங்கிட்டு இன்றைக்கு விளாத்திகுளம் வந்தாரு சின்னப்பன். அவருக்கு கட்சிக்காரங்க வரவேற்பு கொடுத்தார்கள். கூட்டத்தை பார்த்த உடனே மனுசன், தனக்கு இரட்டைஇலை சின்னத்திலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சகோதரி கனிமொழிக்கு ஓட்டுப் போடுங்கன்னாரு. உடனே கட்சிக்காரங்க சுட்டிக்காட்டிய உடனே, தமிழிசைக்கு ஓட்டுப்போடுங்கன்னு கேட்டுக்கிட்டார்.

 

சின்னப்பன்

 

 

இதைக்கூட சரி ஏதோ வாய் தவறி சொல்லிட்டார்னு எடுத்துக்கலாம். ஆனால், அதற்கு அப்புறம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”1977-ல் எனக்கு 9 வயசு, அப்பவே நான் அண்ணா திமுகவுக்கு பணியாற்றினேன். 1984-ல் நான் பத்தாங்கிளாஸ் படிச்சேன். அப்ப நடந்த தேர்தலிலும் அதிமுகவுக்கு வேலை பார்த்தேன். அப்ப கடம்பூர் ராஜூதான் எனக்கு தேர்தல் பொறுப்பாளர்”னு அடிச்சு விடுறார். எனக்கு தெரிஞ்சி இவருக்கு 2006-ல் எம்.எல்.ஏ சீட் கொடுத்தாங்க, அதற்கு முன்னாடி மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவரா இருந்தாரு. ஆனா நாலாங்கிளாஸ் படிக்கும்போது கட்சி பணியாற்றினேன் என்று கப்சா விடுவதை எல்லாம் ஏத்துக்க முடியாது'' என்றார்.

ஏற்கனவே நேற்று மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தனக்கு சீட் வழங்கமால், திமுக வெற்றி பெறும் நோக்கில் கனிமொழியிடம் பணம் பெற்று கொண்டு வேட்பாளரை தேர்வு செய்துள்ளதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் சின்னப்பன் கனிமொழிக்கு ஓட்டு கேட்டது உண்மையான அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்