Skip to main content

“மக்களுக்காக டெல்லி செங்கோட்டையில் குரல் எழுப்புவேன்” - அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
ADMK candidate Karupiya campaigned will raise my voice in Delhi's Red Fort

திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகள் டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் எனக் கூறி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தில் நேற்று (16-04-24) திருச்சியில் விடுபட்ட பகுதியில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து நேற்று மாலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ரோடு ஷோ பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘திருச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா மண்ணின் மைந்தர். திருச்சி தொகுதியின் வளர்ச்சியை ஜெட் வேகத்தில் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர். கொரோனா காலத்திலும், கஜா புயல் களத்திலும் தீவிர பணியாற்றியவர். புதுக்கோட்டையின் கோரிக்கைகள் டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க கருப்பையாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்றார்.

இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா பேசுகையில், “நான் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்தால் புதுக்கோட்டை மக்கள் மட்டுமில்லாமல் திருச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக டெல்லி செங்கோட்டையில் குரல் எழுப்புவேன்’’ என்றார்.

ரோடு ஷோவில் ஏராளமான இரு சக்கர வாகனங்களில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று பிரசாத்தில் ஈடுபட்டனர். அண்ணாசிலையில் தொடங்கிய பேரணி கீழ ராஜ வீதி, பிருந்தாவனம், மேல ராஜ வீதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், டி.வி.எஸ். கார்னர், பிச்சதான்பட்டி கார்னர், திருவப்பூர், திருக்கோகர்ணம் சென்று திலகர் திடலில் முடிந்தது. இந்தப் பிரச்சாரப் பேரணியில் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கார்த்திக் தொண்டைமான், நெடுஞ்செழியன், நகரச் செயலாளர் பாஸ்கர், சேட்டு, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் செபஸ்தியான், முன்னாள் கவுன்சிலர்கள் மாரிமுத்து, கண்ணன், தியாகு மற்றும் ஜீவா, செல்வராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுமன் காளிதாஸ், நகர வர்த்தக அணி செயலாளர் தாரணி உதய குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்