Skip to main content

"இதுபோன்ற சம்பவம் இனி எந்த வீரருக்கும் நடக்கக்கூடாது" - கண்டனம் தெரிவித்த மகளிர் ஹாக்கி அணி கேப்டன்! 

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

rani rampal

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில், காலிறுதிக்கு கூட செல்லாது என கூறப்பட்ட இந்திய மகளிர் அணி அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்தது. மகளிர் அணியின் இந்த சாதனையில் முக்கிய பங்காற்றியவர் வந்தனா கட்டாரியா. இந்தநிலையில், இந்திய  மகளிர் அணி அரையிறுதியில் தோல்வியடைந்தவுடன், வந்தனா கட்டாரியாவின் கிராமத்தைச் சேர்ந்த பிற சாதி இளைஞர்கள் இருவர், வந்தனா கட்டாரியா குடும்பத்தினர் மீது சாதிய வன்மத்தைக் கக்கியுள்ளனர்.

 

அரையிறுதியில் இந்திய மகளிர் அணி தோற்றதும் பிற சாதி இளைஞர்கள் சிலர், வந்தனா கட்டாரியா வீட்டின் முன் பட்டாசு வெடித்து ஆடியதொடு மட்டுமல்லாமல், வந்தனாவின் குடும்பத்தையும் சாதி ரீதியாக இழிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள், அதிக பட்டியலினத்தவர்கள் அணியில் இருந்ததால்தான் அணி தோற்றது எனவும், ஹாக்கியில் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் பட்டியலினத்தவர்களை வெளியிலேயே வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

 

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வந்தனாவின் குடும்பத்தினர் சாதி ரீதியாக இழிவு படுத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் "வந்தனாவின் குடும்பத்தினருக்கு நடந்தது வெட்கக்கேடான செயல். சாதிவெறியை விடுத்து முன்னேற வேண்டும் என மக்களிடம் கூற விரும்புகிறேன். நமது மதங்கள் வெவ்வேறானவை. நாங்கள் நாட்டின் வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்கள். ஆனால் நாங்கள் விளையாடும்போது இந்திய கொடிக்காகத்தான் ஆடுகிறோம். இதுபோன்ற சம்பவம் இனி எந்த வீரருக்கும், சாதாரண மனிதனுக்கும் நடக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

 

 
 

சார்ந்த செய்திகள்