இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (22.04.2021) ஒரேநாளில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கரோனா உறுதியானது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்தனர். மேலும், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளன. டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி தெரிவிப்பதும், ஆக்ஸிஜன் முழுவதுமாக தீர்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் படேல், தனது சொந்த தொகுதியான மத்தியப் பிரதேசத்தின் தாமோவில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது ஒருவர் தனது தாய்க்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டு ஆவேசமாக பேசினார்.
அவருக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர், “இவ்வாறு பேசினால் இரண்டு அறை கிடைக்கும்” என்றார். இருப்பினும் ஆக்ஸிஜன் கேட்ட நபர், அடிவாங்க தயாரென்றும், தனது தாயாருக்கு ஆக்ஸிஜன் வழங்க வேண்டுமென்றும் என பதிலளித்தார். மேலும், அவரது தாயாருக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் இரண்டு மணி நேரமே நீடித்ததாக கூறினார்.
தாயாருக்கு ஆக்ஸிஜன் கேட்ட நபரை அறைவேன் என மத்திய அமைச்சர் கூறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “யாரும் உதவி செய்ய மறுக்கவில்லை. ஆனால் அந்த நபர் ஒழுங்காக பேசியிருக்க வேண்டும்” என பிறகு கூறியது குறிப்பிடத்தக்கது.