Skip to main content

2024 மக்களவை தேர்தல்; மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் தீவிரம்!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

chandrasekhar rao

 

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதிலிருந்தே அத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தசூழலில் மம்தாவின் அதிரடி நடவடிக்கைகளால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மம்தாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என கருதப்பட்டது.

 

இந்தநிலையில் தெலங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்றுதிரட்ட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. கடந்தாண்டு இறுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோதும் இதுகுறித்து சந்திரசேகர ராவ் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இதனைத்தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சந்திரசேகர ராவை நேரில் சந்தித்தார். மேலும் லாலு பிரசாத் யாதவுடன் தொலைபேசி வாயிலாகவும் சந்திரசேகர ராவ் உரையாடினார். இது சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதை உறுதி செய்வதாக அரசியல் வல்லுநர்கள் கூறிய நிலையில், அதனை சந்திரசேகர ராவே உறுதிப்படுத்தியுள்ளார்.

 

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், (பாஜக தலைமையிலான) தேசிய ஜனநாயகக் கூட்டணி  மற்றும் (காங்கிரஸ் தலைமையிலான) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகிவற்றுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்கப்போவதாகவும், அதுதொடர்பாக மஹாராஷ்ட்ரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை சந்திக்கபோவதாகவும் கூறியுள்ளார்.

 

இதற்கிடையே சந்திரசேகர ராவ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சந்திப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு தனியான அமைப்பை (கூட்டணியை) உருவாக்க முயற்சித்து வருகிறோம் என கூறியுள்ளார். இதனால் மீண்டும் இந்திய அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்