முன்பு திருமணம் என்றால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து மணமகனைக் கூட்டிக்கொண்டு மணமகள் வீட்டிற்குச் செல்வார்கள். அங்கு மணமகள் தலைகுனிந்தவாறு தட்டில் காப்பியைக் கொண்டு வந்து மணமகன் மற்றும் உறவினர்களுக்குத் தருவார். புகைப்படத்தில் மட்டுமே பார்த்த மணமகளின் முகத்தை நேரில் காண வேண்டும் என்று மணமகன் ஏங்கித் தவிப்பான். ஆனால் அவளோ தலைகுனிந்தவாறு வீட்டிற்குள் சென்று விடுவாள். இருவீட்டாரும் பேசி முடித்துவிட்டு புறப்பட்டு விடுவார்கள்.
பின்னர் மணமகன் தனது வாழ்க்கைத் துணைவியாக வரவிருப்பவளை எப்படியாவது கண்டுவிட வேண்டும் என்று, இரண்டு நாள்கள் கழித்து ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி மணமகள் வீட்டிற்குச் செல்வான். ஆனால் அங்கு மாமனார் மட்டுமே பேசி முடித்து அவனை வீட்டிற்கு வழி அனுப்பி விட்டுவிடுவார். இதையடுத்து திருமணத்தில்தான் மணமகன், மணமகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்கள். இப்படிப்பட்ட பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்தன்று தான் மணமக்களை ஒன்றாக நின்று புகைப்படம் எடுக்கக் கூட குடும்பத்தினர் அனுமதிப்பார்கள்.
ஆனால் தற்போது அப்படி இல்லை. கலாச்சார மாற்றத்தால், நாகரிக மோகத்தால் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்ட பிறகு, திருமணத்தைப் பற்றி பெற்றோரிடம் தெரிவிக்கும் செய்திகளை எல்லாம் நம்மால் காண முடிகிறது. சிலர் சமூகவலைதளங்களிலேயே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறத்தான் செய்கின்றன. திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். பார்வையாளராக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, குறைகூறவோ நமக்கு உரிமை இல்லை.
இது ஒருபுறம் இருக்க திருமண ஜோடிகள், திருமணத்திற்கு முன்பு ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் மூலம் இணையத்தை கலக்கி வருகின்றனர். ஆற்றில் படகில் அமர்ந்து போட்டோ சூட், ஏன் தண்ணீருக்கு அடியில் கூட போட்டோ சூட் என இதற்காக திருமண ஜோடி லட்சக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வரும் நிலையில் காருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் மணப்பெண்ணும், மணமகனும் சேசிங் செய்வது போன்று போட்டோ ஷூட் நடத்தப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அன்மையில் கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் நிகில், அஞ்சலி என்ற ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. தம்பதிகள் இருவரும் கோவில் வளாகத்திற்குள்ளேயே போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தனர். யானைக்கு முன்னே நின்று தம்பதிகள் இருவரும் போட்டோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது கோவிலுக்குச் சொந்தமான தாமோதரதாஸ் என்ற அந்த யானை கோவிலை நோக்கி நகர்ந்தது. திடீரென மிரண்ட யானை திரும்பி அருகே நடந்து வந்த பாகனை தும்பிக்கையால் தூக்கித் தலைகீழாக எறிந்தது. அந்த நேரத்தில் பாகன் அணிந்திருந்த சட்டை கழன்றதால் யானையின் பிடியிலிருந்து தப்பித்து ஓடினார். அதேநேரம் யானையின் மேலே அமர்ந்திருந்த பாகன் யானையைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் யானையானது சாந்தமானது.
இந்தக் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்பொழுது இதேபோல் இன்னொரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவில் யானை முன்பு நின்று திருமண ஜோடிகள் வெட்டிங் சூட் எடுத்துக் கொண்டிருந்த பொழுது யானை பச்சை மட்டையை தூக்கி வீசி அடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண போட்டோ சூட்டுக்கும் கேரள யானைகளுக்கு அப்படி என்னதான் ஏழாம் பொருத்தமோ...